Copyright @ 2011,2012 www.swamysaranam.co.in & powered by www.clientswebhosting.com
Supported by www.myayyappan.com , www.bakthimalai.com
சாஸ்தாவின் ஏழுகோயில்கள்:
மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை, பிரம்மாந்திரம் என்ற ஏழுவகை நிலை உண்டு. ஒருமனிதனை எடுத்துக்கொண்டால் அவனது மூலாதாரம் - கால்கள். சுவாதிஷ்டானம் - இடுப்பு. மணிபூரகம் - வயிறு. அனாகதம் - இடுப்புக்கும் வயிறுக்கும் இடைப்பட்ட பகுதி. விசுத்தி - மனம். ஆக்ஞை - பிடரி. பிரம்மாந்திரம் - தலைப்பகுதி. ஆக ஏழுவகை நிலைகளில் மனிதனின் உடலமைப்பு உள்ளது. கோயில்களையும் ஏழுவகையாக பிரிப்பார்கள். சிவபெருமானை எடுத்துக்கொண்டால் அவரது மூலாதாரம் -திருவாரூர். சுவாதிஷ்டானம் - திருவானைக்காவல். மணிபூரகம் - திருவண்ணாமலை. அனாகதம் - சிதம்பரம். விசுத்தி - காளஹஸ்தி. ஆக்ஞை - காசி. பிரம்மாந்திரம் - கைலாஷ். இதுபோல தர்மசாஸ்தா எனப்படும் ஐயப்பசுவாமியின் மூலாதாரம் - பாபநாசம் சொரிமுத்தையன் கோயில். சுவாதிஷ்டானம் - அச்சன்கோவில். மணிபூரகம் - ஆரியங்காவு. அனாகதம் - குளத்துப்புழை. விசுத்தி - பந்தளம், ஆக்ஞை - சபரிமலை. பிரம்மாந்திரம் - காந்தமலை. இதன்படி ஆக்ஞை எனப்படும் பிடரியாக விளங்குவது சபரிமலை. மனித உறுப்பில் பிடரி முக்கிய பகுதியாகும். குழந்தைகளை சிலர் கோபத்தில் பிடரியில் அடிக்கும் போது, அப்படி செய்யக்கூடாது என பெரியவர்கள் எச்சரிப்பர். ஏனெனில், பிடரியில் அடித்தால் உயிர் போய்விடவும் வாய்ப்புண்டு. இவ்வகையில், சபரிமலை உயிர் ஸ்தலமாக விளங்குகிறது. எப்பேர்ப்பட்ட துன்பத்தையும் தீர்த்து உயிருக்கு பாதுகாப்பு தரும் தெய்வமாக சபரிமலை ஐயப்பன் விளங்குகிறார்.
பம்பையில் கட்டு கட்டாதீர்!
சபரிமலைக்கு சென்றபிறகு பதினெட்டு படிகளில் ஏற வேண்டும் என்ற ஆவலில் பம்பை நதிக்கரையில், சிலர் கட்டு கட்டி அப்படியே மலை ஏறுகிறார்கள். இவர்கள் விரதம் எதுவும் இருப்பதில்லை. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. முறையாக விரதமிருந்து மாலை அணிந்து 41நாள் விரதமிருந்து பிறகு தான் கன்னி சுவாமிகள் மலைக்குச் செல்ல வேண்டும். பம்பையில் இருந்து மாலை அணிந்து மலை ஏறுவது பாவம். இவர்கள் ஐயப்பனை அதற்கென உள்ள மாற்றுப்பாதையில் தரிசிக்கலாம். அதற்கு மண்டல, மகர விளக்கு காலத்தில் தான் செல்ல வேண்டும் என்பதில்லை. மாதபூஜை மற்றும் பங்குனி பிரம்மோற்ஸவ சமயத்தில் சென்று வரலாம்.
பெரிய சிறிய அம்பலம்:
எருமேலியில் பெரியம்பலம் என்ற பெரிய கோயில், சிறியம்பலம் என்ற இரண்டு கோயில்கள் உள்ளன. சபரிமலை பக்தர்கள் மலையேறும் முன் முதலில் இங்குதான் செல்வர். தாயின் வயிற்று வலியை போக்க புலிப்பால் தேடி ஐயப்பன் காட்டுக்கு சென்ற போது எருமைத்தலையுடன் கூடிய மகிஷியை வதம் செய்த இடம் எருமேலி. எருமை தலை உடைய மகிரிஷியை கொன்றதால் அந்த இடம் தொடக்கத்தில் எருமைகொல்லி என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் இந்த பெயர் மருவி எருமேலி என்று பெயர் பெற்றது. ஐயப்பன் வில்லும் அம்பும் ஏந்தி நிற்கும் சிலைகள் இந்த கோயில்களில் உள்ளன. பகவதி, நாகராஜா சந்நிதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. எருமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது. சிறிய கோயிலில் பேட்டை கட்டும் பக்தர்கள் பெரிய கோயிலில் வந்து பேட்டை துள்ளலை நிறைவு செய்கின்றனர்.
இங்கு மலைகளின் அதிபதியான சிவபூதகணங்கள் உள்ளனர். அவர்களை வணங்கி கோயிலில் உள்ள தலப்பாறையில் காணிக்கை செலுத்தி கொடுங்காடு வழியாக பயணத்தை தொடர்கின்றனர். மகரவிளக்குக்கு மூன்று தினங்களுக்கு முன்னர் எருமேலியில் நடக்கும் அம்பலப்புழா, ஆலங்காடு ஐயப்ப பக்தர்களின் பேட்டை துள்ளல் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயில்கள் காலை 5 முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். பெரிய கோயிலில் மாசி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் பிரம்மோற்ஸ்வம் துவ்ஙகி, உத்திரம் நட்சத்திரத்தில் ஆறாட்டு நடக்கிறது. அப்பம், அரவணை முக்கிய பிரசாதம். நீராஞ்சனம், கணபதிஹோமம் இங்குள்ள வழிபாடுகளாகும்.
ஐயப்ப பக்தர்கள் துளசி மாலை அணிவது ஏன்?
சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க செல்லும் பக்தர்கள் ருத்ராட்ச மாலையும், துளசி மாலையும் அணிந்து விரதமிருந்து செல்வார்கள். சிவனும் பெருமாளும் இணைந்து ஒரு மாபெரும் சக்தியாக உருவானவர் ஐயப்பன். இதில் ருத்ராட்சம் என்பது சிவனின் சின்னமாகும். துளசி என்பது பெருமாளுக்கு மிகவும் பிடித்தமானது. இது தவிர, துளசியின் கதையில் துளசியிடம் மஹாலட்சுமி வாசம் செய்கிறாள். ஆகையால் மலைக்குப் போகும் பக்தர்களுக்கு ஐஸ்வர்யம், சுபீட்சம் கிடைக்கும் என நம்பிக்கையும் உண்டு.
கார்த்திகை மாதத்தில் தொடங்கி, தை மாதம் வரை குளிர் இருப்பது நம் எல்லோருக்கும் தெரியும். இந்தத் துளசிக்கு உஷ்ணம் கொடுக்கும் தன்மை உண்டு. சளி, ஜலதோஷம் என்றால் துளசி கஷாயம் சாப்பிடுவது வழக்கம். ஐயப்ப பக்தர்கள், உடலில் வெப்பம் கொடுக்கத்தான் இந்தத் துளசி மாலையை அணிகின்றனர். மஹாவிஷ்ணு பாற்கடலில் சயனித்திருக்க, அவர் கழுத்தையும் துளசி மாலை அலங்கரிக்கும். இதன் காரணமாக ஐயப்ப பக்தர்கள் ருத்ராட்சம் மற்றும் துளசி மாலையணிந்து சபரிமலை செல்கின்றனர்.
தர்மசாஸ்தாவைப் பற்றிய தகவல்கள்