ஸ்ரீ தர்மசாஸ்தா துணை
 
சபரிமலை ஐயப்ப சுவாமி
தத்வமசி என்பதன் பொருள் :
சபரிமலை யாத்திரையின் இறை அனுபவத்தைச் சொல்லால் வடிக்க முடியாது. மாலையணிந்து விரதம் மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் ஐயப்பனின் பிரதிபிம்பமாக விளங்குகின்றனர். மாலையணிந்த அனைவருமே ஐயப்பன்மார் என்றும், சுவாமிமார் என்றும் பெயர் பெறுகின்றனர். பகவானுக்கும் பக்தனுக்கும் வேற்றுமை ஏதுமில்லை என்பதை இது காட்டுகிறது. 18 படிகளைக் கடந்து மேலே ஏறினால் ஒவ்வொருவரின் கண்ணில் படும் வேதவாக்கியம் தத்வமசி என்பதாகும். நீயே அது என்பது இதன் பொருள். மூலவராகக் காட்சி அளிக்கும் ஐயப்பசுவாமியும்,விரதமிருந்து வரும் பக்தனும் ஒன்றே என்பதை இந்த வார்த்தை உணர்த்துகிறது. கடவுளே உலகில் உள்ள அனைத்துமாகக் காட்சியளிக்கிறார். காணும் காட்சியெல்லாம் இறைவனே அன்றி வேறில்லை என்ற தூய்மையான நிலையை அடைவதற்காக இவ்விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த உயரிய நிலையை மனிதகுலம் பெறவேண்டும் என்பதற்காகவே ஹரிஹர புத்திரன் சபரிமலையில் கோயில் கொண்டிருக்கிறார்.
ஹரிஹரசுதன் விளக்கம் :
ஹரியாய் இருக்கும் பெருமாளுக்கும், ஹரனாய் இருக்கும் சிவபெருமானுக்கும் பிறந்த புண்ணியமூர்த்தியான சாஸ்தா மானிடப்பிறப்பெடுத்தார்.இவரை ஹரிஹரசுதன் என்பர். சுதன் என்றால் பிள்ளை. விஷ்ணுமாயையில் சிவபெருமானுக்கு பிறந்த தாரகபிரம்மம் என்று இவரைக் குறிப்பிடுவர். தாரகபிரம்மம் என்றால் உயர்ந்த கடவுள். சாஸ்தாவின் வரலாற்றை பூதநாத புராணம் மற்றும் ஐயப்பன் பாடல்கள் மூலம் அறிந்துகொள்ளலாம்.
பதினெட்டாம் படியின் நீளம் :
சபரிமலை ஐயப்பசுவாமிக்கு இணையாக பக்தர்களால் போற்றப்படுவது பதினெட்டுப்படிகளாகும். இப்படிகள் ஒரே கல்லால் செதுக்கப்பட்டவை. மனிதவாழ்வின் குறிக்கோளை அடைவது தான். அக்குறிக்கோளை அடைய பாதையும் மிகமுக்கியமானது என்ற தத்துவத்தை இப்படிகள் நமக்கு உணர்த்துகின்றன. ஒவ்வொரு படியும் ஐந்துஅடி நீளம் கொண்டது. இவ்வாறு அமைக்க காரணம் உண்டு. ஆகாயம், நீர், காற்று, மண், நெருப்பு ஆகியபஞ்சபூதங்களின் உயர்வைக்காட்டுவதாக உள்ளது. நம் உடலும் பஞ்சபூதங்களின் சேர்க்கையே என்பதை இது உணர்த்துகிறது. அதாவது, நமது உடலில் காதில் இருக்கும் வெட்டவெளியை சிதாஹாசம் என்பர். இதற்கு அறிவுள்ள வெட்டவெளி என்று பெயர். இதுவே ஆகாயத்தத்துவம். எனவே தான் தீட்சை பெறுபவர்களின் காதில் ரகசியமாக மந்திரங்கள் ஓதப்படுகிறது. நமது உடலிலுள்ள ரத்தம், திரவங்கள் உள்ளிட்டவை நீர் தத்துவம். நாம் விடும் மூச்சே காற்று. நம் உடலிலுள்ள சதையை மண் என்பர். அடிவயிற்றிலுள்ள ஜடராக்னி பசியைத் தூண்டுகிறது. இதுவே நெருப்பு. இதையெல்லாம் தெரிந்து கொண்டு ஐந்தடி நீளமுள்ள படியில் கால் வைத்தால் பக்திபெருக்கெடுக்காதா என்ன!
சபரிமலையில் 19 மணி நேரம் நடை திறப்பு!

சபரிமலை: சபரிமலையில் ஒரு நாள் 19 மணி நேரம் நடை திறந்திருக்கிறது. 5 மணி நேரம் மட்டுமே நடை அடைக்கப்படுகிறது. சபரிமலையில் மண்டல பூஜைக்காக, நடை திறந்த பின், தொடர்ச்சியாக பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. இதனால், 40 சதவீதம் வரை தேவசம்போர்டுக்கு வருமானம் அதிகமாகியுள்ளது. பொதுவாக, சீசன் காலத்தில் காலையிலும், மாலையிலும் 4:00 மணிக்கு நடை திறக்கப்படும். சீசன் அல்லாத காலங்களில் காலையிலும், மாலையிலும் 5:00 மணிக்கு திறக்கப்படும். அது போல சீசனில் பகல் ஒரு மணிக்கும், இரவு 11:00 மணிக்கும், நடை அடைக்கப்படும். ஆனால், இந்த சீசனில் கூட்டம் மிக அதிகமாக உள்ளதால், தரிசன கியூ நீண்டு போகாமல் தடுக்க, நடை திறந்திருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகாலை 3:00 மணிக்கு திறக்கப்படும் நடை மதியம் அடைக்கும் போது, ஒன்றே முக்கால் மணி வரை ஆகிறது. அதுபோல மாலை 3:00 மணிக்கு திறக்கப்படும் நடை இரவு அரிவராசனம் பாடி, அடைக்கும் போது 11:45 வரை ஆகி விடுகிறது. இதனால், ஒரு நாள் 19 மணி நேரம் வரை நடை திறந்திருக்கிறது.

சன்னிதானத்தில் ஆன்லைன் கியூ: புதிய முறையில் மாற்றி அமைப்பு!
சபரிமலை: சபரிமலையில் ஆன்லைன் கியூவிற்காக அமைக்கப்பட்டிருந்த ஏற்பாடுகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பதிவு செய்தவர்களும், செய்யாதவர்களும் நடைப்பந்தலில் கியூவில் நிற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரள போலீசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆன்லைன் முன்பதிவில் தினமும் 20 முதல் 28 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்கின்றனர். இவர்கள் மரக்கூட்டம் என்ற இடத்தில் வரும் போது சரங்குத்தி வழியாக போக வேண்டியதில்லை. இவர்கள் சந்திராங்கதன் ரோடு வழியாக சன்னிதானத்துக்கு அனுப்பபடுகின்றனர். இவ்வாறு கியூவில் இல்லாமல் வரும் ஆன்லைன் பதிவு தாரர்கள் நடைப்பந்தல் அருகே உள்ள பிளைஓவர் வழியாக, விருந்தினர்மாளிகை செல்லும் பகுதிக்கு வருகின்றனர். பின்னர் நடைப்பந்தலில் கியூவில் நின்று மெட்டல் டிடெக்டர் வழியாக தரிசனத்துக்கு அனுப்பட்டனர். ஆனால் பிளைஓவரில் பக்தர்கள் நிற்பதற்கு வசதி இல்லாததால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பக்தர்கள் சலசலப்பில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீசார் சமாதானம் செய்தனர். இந்நிலையில் நடைப்பந்தலில் உள்ள ஐந்து கம்பி வேலிகளில் இரண்டு வேலிகளில் ஆன்லைன் பதிவுதாரர்களும், மீதமுள்ள கம்பிவேலிகளில் பதிவு செய்யாத பக்தர்களும் நிற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனால் கூட்டம் அதிகமாகும் போது பதிவு செய்யாதவர்கள் கியூ நீண்ட தூரத்துக்கு நீளும் நிலை ஏற்பட்டுள்ளது.
HOME ! ABOUT US ! NEWS !AYYAPPAN SLOKAS IN LYRICS!AYYAPPAN SONGS IN LYRICS ! PHOTOS ! VIDEOS ! COMMENTS

Copyright @ 2011 - 2015 www.swamysaranam.co.in & designed ,hosted by www.clientswebhosting.com

HIT COUNTER