ஸ்ரீ தர்மசாஸ்தா துணை
 
சபரிமலை ஐயப்ப சுவாமி
ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்வதன் மகிமை!
மனித இதயத்தை தசைநார்கள் சூழ்ந்துள்ளதைப் போல, நார்களால் சூழப்பட்ட தேங்காயைப் பக்தன் தேர்ந்தெடுக்கிறான். அவனது இதயத்தில் உள்ள களங்கமான எண்ணங்களை தேங்காயில் உள்ள நீருக்கு ஒப்பிடலாம். தேங்காயில் துவாரமிட்டு அதை வெளியேற்றி, நவநீதம் என்னும் சுத்தமான எண்ணங்களை பசு நெய்யாக உள்ளே ஊற்றுகிறான். தேங்காயின் துளையை அடைத்து ஐயப்பனின் திருவடியை மனதில் நினைத்து தலையில் வைக்கிறான். பக்தியுடன் சரணம் கூறி சுமந்து செல்கிறான். நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்கிறான். அதாவது, தனது உள்ளத்தில் உள்ள ஆழ்ந்த பக்தியை ஐயப்பனுக்கு காணிக்கையாக்குகிறான். இதன் காரணமாக ஜென்ம சாபல்யம் பெற்ற ஆனந்தம் அடைகிறான்.
துளசிமணி மாலை அணிவது ஏன்?
தெய்வ வழிபாட்டுக்குரிய பல தாவரங்களில் ஒன்று துளசி. ஸ்ரீ மஹா விஷ்ணுவின் பாதங்களில் சேவை செய்யும் பதிவிரதையான தேவிக்கும் துளசி என்று பெயர். துளசிக்கு விஷ்ணுப்பிரியா என்ற பெயரும் உள்ளது. துளசியை சுத்தமில்லாமல், குளிக்காமல் தொடக்கூடாது. சுத்தமான துளசிச் செடியில் உள்ள கட்டையிலிருந்து செய்யப்பட்ட துளசி மணிகளைத்தான் மாலையாக மணிகண்டன் அணிந்து துளசி மணிமார்பனாக அமர்ந்துள்ளார். பவித்ரமான பக்தியுடன் இருக்கவே துளசி மாலை அணிந்து சபரிமலை செல்லும் பழக்கம் ஏற்பட்டது. ஐயப்பன் விஷ்ணுவின் அம்சம் ஆவார். அவரது தாயே மோகினியாக மாறிய விஷ்ணு தான். தாயைப் போல பிள்ளை என்பார்கள். அதுபோல், விஷ்ணுவுக்குப் பிரியமான துளசி, ஐயப்பனுக்கும் பிரியமாயிற்று.
பதினெட்டாம் படியின் நீளம் எவ்வளவு?
சபரிமலை ஐயப்பசுவாமிக்கு இணையாக பக்தர்களால் போற்றப்படுவது பதினெட்டுப்படிகளாகும். இப்படிகள் ஒரே கல்லால் செதுக்கப்பட்டவை. மனிதவாழ்வின் குறிக்கோளை அடைவது தான். அக்குறிக்கோளை அடைய பாதையும் மிகமுக்கியமானது என்ற தத்துவத்தை இப்படிகள் நமக்கு உணர்த்துகின்றன. ஒவ்வொரு படியும் ஐந்துஅடி நீளம் கொண்டது. இவ்வாறு அமைக்க காரணம் உண்டு. ஆகாயம், நீர், காற்று, மண், நெருப்பு ஆகியபஞ்சபூதங்களின் உயர்வைக்காட்டுவதாக உள்ளது. நம் உடலும் பஞ்சபூதங்களின் சேர்க்கையே என்பதை இது உணர்த்துகிறது. அதாவது, நமது உடலில் காதில் இருக்கும் வெட்டவெளியை சிதாஹாசம் என்பர். இதற்கு அறிவுள்ள வெட்டவெளி என்று பெயர். இதுவே ஆகாயத்தத்துவம். எனவே தான் தீட்சை பெறுபவர்களின் காதில் ரகசியமாக மந்திரங்கள் ஓதப்படுகிறது. நமது உடலிலுள்ள ரத்தம், திரவங்கள் உள்ளிட்டவை நீர் தத்துவம். நாம் விடும் மூச்சே காற்று. நம் உடலிலுள்ள சதையை மண் என்பர். அடிவயிற்றிலுள்ள ஜடராக்னி பசியைத் தூண்டுகிறது. இதுவே நெருப்பு. இதையெல்லாம் தெரிந்து கொண்டு ஐந்தடி நீளமுள்ள படியில் கால் வைத்தால் பக்திபெருக்கெடுக்காதா என்ன!
சபரிமலை மண்டல காலம் நிறைவு: டிச., 30ல் மீண்டும் நடைதிறப்பு!
சபரிமலை: சபரிமலையில் "மண்டல காலம், நேற்று நடந்த மண்டல பூஜையுடன் நிறைவு பெற்றது. இனி, மகர விளக்குக்காக, டிச., 30 மாலை, மீண்டும் நடை திறக்கப்படும். சபரிமலையில் "மண்டல காலத்தின் கடைசி மூன்று நாட்கள், பக்தர்கள் கூட்டம் அதிகம். நேற்று காலை 8 மணிக்குப் பின், கூட்டம் குறைந்தது. அதன் பிறகே போலீசார் நிம்மதி அடைந்தனர். நேற்று காலை 11 மணிக்கு, நெய் அபிஷேகம் நிறுத்தப்பட்டதும், கோயில் சுற்றுப்புறம் சுத்தப்படுத்தப்பட்டு, முன்புறம் உள்ள மண்டபத்தில், தந்திரி கண்டரரு மகேஷ் வரரு "களபபூஜை நடத்தினார். பின், பிரம்மகலசத்தில் களபம் நிறைக்கப்பட்டு, மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி, அதை எடுத்து கோயிலை வலம் வந்தார். ஐயப்பனின் மூலவிக்ரகத்தில் களப அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, மண்டல பூஜை நடந்தது. தந்திரி கண்டரரு மகேஷ்வரரு, தீபாராதனை நடத்தி பூஜையை நிறைவு செய்தார். மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மாலை தீபாராதனை நடந்தது. "அத்தாழ பூஜை க்கு பின், இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று முதல், டிச., 30 மாலை வரை, பக்தர்கள் சன்னிதானம் செல்ல முடியாது; அன்று மாலை 5.30 மணிக்கு நடை திறந்ததும், "மகரவிளக்கு காலம் தொடங்கும். மறுநாள் அதிகாலை 4 மணிக்கு, நடை திறந்ததும் நெய் அபிஷேகம் தொடங்கும். ஜன.,14 ல், "மகர விளக்கு பெருவிழா நடக்கிறது.
HOME ! ABOUT US ! NEWS !AYYAPPAN SLOKAS IN LYRICS!AYYAPPAN SONGS IN LYRICS ! PHOTOS ! VIDEOS ! COMMENTS

Copyright @ 2011 - 2015 www.swamysaranam.co.in & designed ,hosted by www.clientswebhosting.com

HIT COUNTER