ஸ்ரீ தர்மசாஸ்தா துணை
 
சபரிமலை ஐயப்ப சுவாமி
சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் :

சபரிமலையில் முதன்முதலில் பரசுராமரே கோயில் அமைத்தார். அப்போது தர்மசாஸ்தாவின் விக்ரகத்தினையே அவர் அங்கே பிரதிஷ்டை செய்தார். தர்மசாஸ்தாவே மகிஷி வதம் செய்திட ஐயப்பனாக அவதரித்தார். அவதார நோக்கம் முடிந்ததும், சின் முத்திரையுடன் யோகபட்டம் தரித்து தவம் புரிந்தார் ஐயப்பன். நிறைவாக பரசுராமர் அமைத்த தர்மசாஸ்தா விக்ரகத்தில் ஐக்கியமானார். அதன் பிறகே சின்முத்திரை காட்டி யோகபட்டம் தரித்து, அமர்ந்த நிலையில் உள்ள ஐயப்பனின் வடிவம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆதிகாலத்தில் சாஸ்தாவின் வடிவிற்கு ஆண்டுக்கு ஒருமுறை மகரசங்கராந்தி அன்று மட்டுமே வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஐயப்பன் வடிவம் அமைந்த பிறகே மாத பூஜைகள், மண்டல பூஜைகள், மகரவிளக்கு பூஜைகள் தொடங்கப்பட்டன.

அந்தக் காலத்தில் நான்கு வேதங்களையும் புராண சாஸ்திரங்களையும் முழுமையாக அறிந்தவர்களை நாலும் தெரிந்தவர்கள் என்று சொல்வார்கள். வேத புராணங்களை உருவாக்கிய சிவவிஷ்ணு மைந்தனானதால் பிறவியிலேயே அனைத்தையும் அறிந்திருந்தார் ஐயப்பன். ஆயினும் மானிட அவதார தர்மத்திற்கு ஏற்ப பந்தளராஜன் மகனாக வளர்ந்தபோது சகல சாஸ்திரங்கள், வேதங்கள், புராணங்கள் என அனைத்தையும் கற்று நாலும் தெரிந்தவர் என்ற பெருமை பெற்றிருந்தார்.

சபரிமலைக்கு பொருட்கள் கொண்டு வர ரோப் கார்!
சபரிமலை: சபரிமலைக்கு பொருட்கள் கொண்டு செல்ல ரோப் கார் அமைக்கும் திட்டம், குறித்து டிச., 19 ல் நடக்கும் தேவசம் போர்டுஉயர்மட்ட கூட்டத்தில், இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. பம்பையிலிருந்து, சன்னிதானத்துக்கு தேவையான பொருட்கள், கழுதைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. அவை சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தியதால், மனிதர்கள் மூலம் தலைச்சுமையாக கொண்டு வந்தனர். இதில் செலவு அதிகமானது; பொருட்கள் வந்து சேருவதிலும் சிக்கல் இருந்தது. நடை அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் மட்டுமே இயக்கப்பட்ட டிராக்டர்கள், "மண்டலம், "மகர விளக்கு காலங்களிலும் இயக்கப்படுகின்றன. ஆனால், பக்தர்கள் கூட்டத்தில் டிராக்டர் செல்வதால், விபத்து வாய்ப்பு உள்ளது. "பொருட்களை சபரிமலை கொண்டு செல்ல, "ரோப் கார் அமைப்பது தான் சிறந்த வழி என்ற முடிவுக்கு தேவசம்போர்டு வந்துள்ளது. பம்பையில் துவங்கும் இந்த "ரோப் வே, சன்னிதானத்தின் பிரசாத மண்டபத்தின் பின்புறம் வந்து சேரும் வகையில், திட்டம் தயாரிக்கப்பட்டு, ஆய்வு பணிகள் முடிந்துள்ளன. திட்டத்தை செயல்படுத்த, 2 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. "சபரிமலை மாஸ்டர் பிளான் திட்டத்தை செயல்படுத்த நியமிக்கப்பட்டுள்ள, உயர்மட்டக்குழு தலைவர் ஜெயக்குமார் தலைமையில், டிச., 19 ல், சன்னிதானத்தில் கூட்டம் நடக்கிறது இதில், "ரோப் கார் திட்டத்துக்கு அனுமதி கிடைத்தால், அடுத்த "மண்டல காலத்திற்குள் செயல்படுத்த தேவசம்போர்டு திட்டமிட்டுள்ளது.
ஏழு புனித அம்சங்கள் கொண்ட சபரிமலை!

சுயமாக உண்டானது அல்லது இறைவனுடைய ஜோதிர்லிங்கம் விளங்கும் சுயம்புலிங்க பூமி; மகாயாகம் நடந்த யாக பூமி; பக்தி மார்க்க தர்ம யுத்தம் நடந்த பலி பூமி; ரிஷிகள் தவமிருந்த யோக பூமி; யோகியர்கள் வாழ்ந்த தபோ பூமி; தேவர்களால் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட தவ பூமி; புனித நதிகள் சங்கமிக்கும் பூமி.

இந்த எழில் ஒன்றிருந்தாலும் அது புனித பூமியாகும் இத்தகைய திருத்தலத்திற்கு யாத்திரை செல்வதாலும், தரிசனம் செய்வதாலும், அங்குள்ள புனிதத் தீர்த்தத்தில் நீராடுவதாலும் ஒரு ஜீவனின் அனைத்துப் பாவங்களும் நீங்கி, கோடி புண்ணியம் கிட்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது. ஐயப்பன் எழுந்தருளியுள்ள சபரிமலை இந்த ஏழு அம்சங்களும் கொண்டு திகழ்கிறது. பதினெட்டு மலைகள் சூழ்ந்த நிலையில் சபரிமலை சுயம்புவாக எழுந்து அனைத்து மலைகளையும்விட உயர்ந்து காணப்படுகிறது. மேலும், இங்கு ஒவ்வொரு வருடமும் மகாசங்கராந்தி புனித நாளில் ஜோதி உருவாய் பொன்னம் பல மேட்டில் ஸ்ரீஐயப்பன் காட்சி கொடுத்தருளுகிறார். எனவே, இது ஜோதிர்லிங்க சுயம்புவாகப் போற்றப்படுகிறது.

இங்கு ஓடும் பம்பை நதிக்கரையில் முனிவர்கள் குடில்கள் அமைத்து தினமும் யாகம் செய்திருப்பதாகப் புராண வரலாறு கூறுகிறது. அதனால் இது மகாயாகம் நடந்த யாக பூமியாகும். இன்றும் ஐயப்ப பக்தர்கள் இங்கு யாக பூஜை செய்வதைக் காணலாம். ரம்பாசுரனின் மகனாகப் பிறந்த மகிஷன் தவம் மேற்கொண்டு, நான்முகனான பிரம்மனிடம் அரிய பல வரங்களைப் பெற்று. அதனால் விளைந்த ஆணவத்தால் தேவர்களைத் துன்புறுத்த ஆரம்பித்தான் தேவர்கள் பராசக்தியை வேண்ட பராசக்தியானவள் மகிஷனிடம் போர்புரிந்து அவளை வதைத்தாள். அதனால் பக்திமார்க்க தர்மயுத்தம் நடந்த பலிபூமியானது. இது ரிஷிகள் தவமிருந்த யோக பூமியாகவும், யோகிகள் வாழ்ந்த தபோ பூமியாகவும், புனித நதிகள் சங்கமிக்கும் பூமியாகவும் திகழ்வதற்கான காரணத்தை ராமாயணகால நிகழ்வுகள் எடுத்துகாட்டுகின்றன.

இலங்கை வேந்தன் இராவணனால் சீதாபிராட்டி கவர்ந்து செல்லப்பட்ட நிலையில் ராமபிரானும் லட்சுமணனும் தேவியைத் தேடி கானகத்தில் அலைந்தனர். அப்போது மதங்க மாமுனிவர் ஆசிரமம் தென்படவே. அங்கு சென்றார்கள். அந்த சமயம் முனிவர் தீர்த்த யாத்திரைக்குச் சென்றிருந்தார். அவரது குடிலில் நீலி என்ற பெண் இருந்தாள். அவள் ராம-லட்சுமணர்களை வரவேற்று. முனிவர் யாத்திரை சென்ற விவரத்தைக் கூறினாள். தான் அங்கு முனிவருக்குப் பணிவிடை செய்வதாகவும், தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவள் என்றும் சொன்னாள். அவளது தாழ்வு மனப்பான்மையைப் புரிந்துகொண்ட ராமபிரான் மனிதர்கள் எல்லோரும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள் இதில் உயர்ந்த இனம் தாழ்ந்த இனம் என்ற பாகுபடில்லை நீ கவலைப்படாதே நீ அளிக்கும் உணவை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் இந்தக் காலகட்டத்தில் உன்னைத் தாழ்ந்தவள் என்று கூறும் மக்கள் உன்னைப் போற்றிப் புகழும் நிலையை உனக்கு அளிக்கிறேன். என்று சொல்லி, அவளின் பூரணசம்மத்துடன் அந்தப் பெண்ணை அழகான அருவியாக மாற்றி புனிதம்பெற அருள்புரிந்தார். அதன் படி அருவியாய் மாறிய அந்தப் பெண்தான் பம்பா நதியாகப் பாய்ந்து தட்சிண கங்கை என்று சிறப்புப் பெயர் பெற்றாள்.

HOME ! ABOUT US ! NEWS !AYYAPPAN SLOKAS IN LYRICS!AYYAPPAN SONGS IN LYRICS ! PHOTOS ! VIDEOS ! COMMENTS

Copyright @ 2011 - 2015 www.swamysaranam.co.in & designed ,hosted by www.clientswebhosting.com

HIT COUNTER