ஸ்ரீ தர்மசாஸ்தா துணை
 
சபரிமலை ஐயப்ப சுவாமி
கங்கையும் பம்பையும்!

பந்தளமன்னர் ராஜசேகரன், தன் மகன் மணிகண்டன் பிரிந்து சென்ற வருத்தத்தில் இருந்தார். அப்போது, அவருக்கு ஆறுதல் கூறும் வகையில், அகத்தியர் ஒரு கதையைச் சொன்னார். ஒருமுறை, கங்கையில் நீராடிய ராம லட்சுமணரும் சீதாவும், பிதுர்களுக்கு (மறைந்த முன்னோர்) திதி செய்தனர். அன்றைய காலகட்டத்தில், பிதுர்கள் நேரில் வந்து பிண்டம் பெற்றுச்செல்வது வழக்கம்.சீதாதேவி மட்டும் ராமலட்சுமணருடன் அமராமல், தனியாக அமர்ந்து திதி கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது தசரதர் வந்தார். தன் பிள்ளைகளிடம் பிண்டம் பெறாமல், மருமகளிடம் பிண்டத்தை வாங்கிக் கொண்டு மறைந்து விட்டார். இதைக்கண்ட ராமபிரானுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. ஆஞ்சநேயரை வரவழைத்து, சத்திய லோகத்தில் இருக்கும் தன் தந்தையை உடனே அழைத்து வர உத்தரவு போட்டார். ஆஞ்சநேயரும் மிக விரைவில் அவரை அழைத்து வந்தார்.தந்தையே! பெற்றவர்கள் பிள்ளைகள் கையால் பிண்டம் பெறுவது தான் உலக நியதி. நீங்களோ, மருமகளிடம் பிண்டம் பெற்றுச் சென்றீர்களே! ஏன் இப்படி செய்தீர்கள்? என பணிவோடு கேட்டார்.
மகனே! நீ கடவுளின் அவதாரம். ஆனால், நான் வாழ்ந்த காலத்தில், உன்னை என் மகனாக எண்ணி, நீ காட்டுக்குப் போன காலத்தில் மனம் வருந்தியிருக்கிறேன். பாசபந்தம் என்ற கட்டில் சிக்கித் தவித்தேன். நான் ஞானமார்க்கத்தை தேடிய போது தான், இந்த வாழ்வு பொய்யானது, மாயை என்ற உண்மையை உணர்ந்தேன். அதன் பின் தான் ராமன் தான் சீதை, சீதை தான் ராமன், உலகிலுள்ள எல்லா உயிரும் ஒரே இடத்திலிருந்தே உற்பத்தியானவை, மாயையில் இருந்து விலகிய பின் அவை வந்த இடத்தையே சென்று சேரும் என்பதை உணர்ந்தேன். எல்லாரும் ஒன்று என்றான பிறகு, சீதையிடம் இருந்து பிண்டத்தை ஏற்றாலும், உன்னிடமிருந்து ஏற்றாலும் ஒன்று தானே என அவளிடம் பிண்டத்தைப் பெற்றேன், என்றார்.தந்தையே! தங்கள் விளக்கம் ஏற்புடையதாக இருந்தாலும், சாஸ்திர முறையை மீறியதாக உள்ளது. அதை மீறியது என் தந்தையே என்றாலும், அதை நான் ஏற்பதற்கில்லை. எனவே, இனிமேல், பிண்டம் பெற பிதுர்கள் யாரும் நேரில் வரக்கூடாது. அது அவர்களை வந்து சேரும் வகையில் ஏற்பாடு செய்வேன், என்று ஒரு விதிமுறையை உருவாக்கினார். கங்கை போன்றே, சபரிமலையிலுள்ள பம்பையும் புனிதமானது. அங்கும் பிதுர்களுக்கு திதி கொடுக்கலாம். பம்பை நதி நீரே பொன்னம்பல மேட்டிலுள்ள ஐயப்பனுக்கு முனிவர்கள் அபிஷேகம் செய்கிறார்கள். இவ்வாறு கதையை முடித்தார் அகத்தியர். தசரதர் போன்றே, தெய்வப்பிறவியான மணிகண்டனை, தன் சொந்த மகனாக எண்ணியதும் மாயை செய்த சதியே என்பதை ராஜசேகர மன்னனும் உணர்ந்து ஆறுதல் அடைந்தார். மணிகண்டனின் கட்டளைப்படி, சபரிமலையில் கோயில் கட்ட முடிவெடுத்தார். தன் அரண்மனையில் வாழ்ந்த தெய்வசக்தியான ஐயப்பனை மனதில் தியானம் செய்தபடியே வாழ்நாள் முழுவதையும் கழித்தார்.

பிளாஸ்டிக்கை தவிர்த்து இருமுடி கட்ட பக்தர்களுக்கு வேண்டுகோள்

சபரிமலை: பிளாஸ்டிக்கை தவிர்த்து இருமுடி கட்டு கட்டி வருவதால் சபரிமலையில் சுற்றுச்சூழலும் புனிதமும் பாதுகாக்கப்படும் என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. சபரிமலை பெரியாறு புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியாகும். எனினும் கோயிலுக்கு வரும் லட்சோபலட்சம் பக்தர்களை கருத்தில் கொண்டு சில விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் நாள் தோறும் பெருகி வரும் பிளாஸ்டிக் குப்பைகள் சபரிமலை சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக உள்ளது. இதனால் முடிந்த அளவு பக்தர்கள் இருமுடி கட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாமல் வரவேண்டும் என்று தேவசம்போர்டு வேண்டுகோள் விடுத்துள்ளது. குறிப்பாக அவல், பொரி, கற்கண்டு, முந்திரிபழம், மஞ்சள், குங்குமம், விபூதி, கற்பூரம் போன்ற பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் கொண்டு வராமல் இலை அல்லது பேப்பரில் பேக்கிங் செய்து கொண்டு வரலாம் என்றும், பக்தர்கள் தேவையில்லாத பொருட்களை சபரிமலையில் வீசி எறிவதற்கு பதிலாக ஊருக்கே திரும்பி கொண்டு செல்லலாம் என்றும் தேவசம்போர்டு ஆலோசனை தெரிவித்துள்ளது.

பக்தர்கள் அரிசியில் அன்னதானம்: பக்தர்கள் கொண்டு வரும் அரிசியை ஆங்காங்கே கொட்டுவதை தவிர்க்க வேண்டும். தற்போது அரிசி காணிக்கை என்று எழுதப்பட்டுள்ள இடத்தில் அரிசி வாங்கப்படுகிறது. இதற்காக நியமிக்கப்பட்ட ஊழியர்களிடம் அரிசியை தரம் பிரித்து வழங்க வேண்டும். கறுப்பு, வெள்ளை, பச்சையரிசி என தரம் பிரித்து வாங்கப்படுகிறது. இந்த அரிசியை தேவசம்போர்டு அன்னதானத்துக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளது. பக்தர்கள் கொண்டுவரும் அரிசியின் மூலம் மூன்று நேரமும் சிறப்பாக அன்னதானம் நடத்த முடியும் என்று தேவசம்போர்டு கருதுகிறது. பக்தர்களுக்கு இது புண்ணியமாக அமையும் என்பதால் அரிசியை தரம் பிரித்து வழங்க வேண்டும் என்று தேவசம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.

பம்பையில் 24 மணி நேர அன்னதானம்: இட்லி, பொங்கல் வழங்க நடவடிக்கை!
சபரிமலை: பம்பையில், வெளிமாநில பக்தர்களுக்கு, 24 மணி நேரமும் அன்னதானம் வழங்க, தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. சபரிமலையில் ஓட்டல்களை மூடி விட்டு, அன்னதானத்தை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தற்போது, சன்னி தானத்திலும், பம்பையிலும், தினமும் காலையில் உப்புமா, மதியம் கூட்டு வகைகளுடன் சாதம், இரவு கஞ்சி, என தேவசம்போர்டு சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. பம்பையில், மேலும் ஒரு அன்னதான திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, பம்பை மணல்பரப்பில், ஓட்டலை மூடி விட்டு, அங்கு 24 மணி நேரமும் இட்லி மற்றும் பொங்கல், சாம்பார் என அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக, மின்சார நீராவி அடுப்பு பயன்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் வெளி மாநில பக்தர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதற்கு, கேரள ஐகோர்ட்டும் அனுமதி அளித்துள்ள நிலையில், அடுத்த வாரம் இத்திட்டம் செயல்பட துவங்கும், என தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
சபரிமலையில் சித்திரை விஷூ கோலாகல கொண்டாட்டம்!
சபரிமலை: கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் சித்திரை விஷூ உற்சாகமாக கொண்டாடப்பட்டது.  சித்திரை விஷூ  தினத்தை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயிலில் அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்ததும் கனி தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு, மேல்சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி ஆகியோர் பக்தர்களுக்கு நாணயங்களை கைநீட்டமாக வழங்கினர். விஷூ தினத்தையொட்டி காலை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 18ம் படியேறவும், தரிசனத்துக்கும் நீண்ட வரிசை காணப்பட்டது. இதுபோல குருவாயூர் கோயிலிலும் கனி காணும் நிகழ்ச்சியும், விஷூ பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றது.
HOME ! ABOUT US ! NEWS !AYYAPPAN SLOKAS IN LYRICS!AYYAPPAN SONGS IN LYRICS ! PHOTOS ! VIDEOS ! COMMENTS

Copyright @ 2011 - 2015 www.swamysaranam.co.in & designed ,hosted by www.clientswebhosting.com

HIT COUNTER