தர்மசாஸ்தாவைப் பற்றிய தகவல்கள்
ஏழைபங்காளன், ஆபத்பாந்தகனான ஐயப்பனின் வழிபாட்டில் ஜாதியில்லை, சமயமில்லை, ஐயப்பனே வாவர் என்ற முஸ்லீம் நண்பரை உடையவர் என்று சொல்லுவார்கள். இதனால் சபரிமலைக்குச் செல்லும் அன்பர்கள் ஒவ்வொருவரும் வாவர் சுவாமி கோயில் என்று வாவர் மசூதிக்கும் சென்று பின்னரே ஐயப்பனைக் காணச் செல்கிறார்கள். பணக்காரன், ஏழை பேதமில்லை.. மாலை அணிந்து ஐயப்பனைக் காணச் செல்ல வேண்டும் என்றால் எல்லோரும் சுவாமிகள்… எல்லோரும் மஞ்சமாதாக்கள்… சிறுவர்கள் யாவரும் மணிகண்டன்கள்.. எங்கும் சமத்துவம் இது தான் ஐயப்ப வழிபாட்டின் விசித்திரம். அருள் உண்டு.. அச்சமில்லை.. எங்கு நோக்கினும் பஜனை..’ சாமியே சரணம் ஐயப்பா’ என்ற சரண கோஷம். எல்லாமே சிறப்புத் தான்.. எனினும் சில விடயங்கள் தெளிவாக்கிக் கொள்வதும் அவசியம். ஐயப்ப வணக்க முறைகள் சில தசாப்த காலங்களுள்ளேயே ஒழுங்கமைக்கப்பெற்றிருப்பதாகவே கருதமுடிகின்றது. ஆகவே, சில விடயங்களில் சிற்சில மாற்றங்களும் தேவை என்று சிறியேன் கருதுகிறேன். என்னைப் பொறுத்த வரையில் நல்ல விஷயங்கள் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியனவே. ஆயினும் சில விடயங்கள் பற்றி சிறியேனுக்குச் சில சந்தேகங்கள் உண்டு. (அ) கன்னிச்சாமிமார்கள் உள்ளிட்ட ஐயப்ப பக்தர்கள் சிலர் கறுப்பு நிறத்தில் ஆடையணிகிறார்கள் .ஆனால் இஸ்லாமிய, கிறிஸ்தவச் சகோதரர்கள் சிலரைத் தவிர நமது இந்துதர்மத்தில் கறுப்புடை சாற்றி வழிபாடுகளில் ஈடுபடும் வழக்கம் இல்லை என்றே அறிகிறேன். திருமால் கார்மேக வண்ணனாய் இருந்தாலும் வைஷ்ணவர்கள் கறுப்பாடை சாற்றிக் கொள்வதில்லை. ஏன் ஐயப்பனடியார்கள் கறுப்பாடை அணிகிறார்கள்?. செம்பொருளான இறைவனைக் காட்ட செவ்வாடை சாற்றுவதோ.. மங்கலமான மஞ்சளாடை, காவியாடை சாற்றுவதோ வெள்ளாடை அணிவதோ ஏற்கத்தக்கது. இது விடயத்தில் மீள்பரிசீலனை செய்தால் என்ன என்பது எனது வேண்டுகோள். அதிலும் கேரள தேசத்தில் வெண்மையான ஆடைகளுக்கு மரியாதை அதிகம். அவர்கள் அதனையே விரும்பி அணிகிறார்கள் .பார்க்கவும் தூய்மையும் அழகும் பொலிகிறது. எனவே ஐயப்ப பக்தர்களும் அதனையே பின்பற்றலாமே? சுவாமி சந்நதியில் பூஜை பண்ணும் மேல்சாந்திமார்கள் உள்ளிட்ட அர்ச்சகர்களும் வெள்ளாடை சாற்றியிருப்பதையே காணும் போது ஏன் இவ்வாறு கறுப்பாடை அணிய வேண்டும் என்பது என் வினா.. சில அடியவர்கள் மோட்டார் வாகனப் பாவனைக்கு கறுப்பு நிற ஹெல்மெட் (தலைக்கவசம்) தான் இக்காலத்தில் அணிகிறார்கள். இப்படி எல்லாம் கறுப்பு மயமாக்கிக் கொள்வது விரதகாலத்திற்குப் பொருத்தமானதா? என்று தெரியவில்லை. சில அடியவர்கள் நீல வர்ண ஆடை அணிகிறார்கள் இதனை ஓரளவு ஏற்றுக்கொள்ள முடிகின்றதல்லவா? (ஆ) இது போல, இஸ்லாமியப் பள்ளி வாசல்களுக்கு தொழுகைக்குப் பெண்கள் செல்ல இயலாது என்பது போல அமைந்திருக்கிற, பெண்ணடியார்களுக்கு ஐயப்பவழிபாட்டிலுள்ள சில தடைகளும் நீக்கப்பெறலாம் என்பதும் தாழ்மையான எனது கருத்து. இருந்தாலும் இது விடயத்தில் பெண்களே சிந்திக்க வேண்டும். ஒரு ஆடவனான சிறியேன் அறிவுக்குறைவுடன் இது பற்றிப் பேசுவதைத் தவிர்க்கிறேன். (இ) ஐயப்பனடியார்களில் சிலர் கார்த்திகை, மார்கழி என்ற இருமாதங்களிலும் விரதம் அனுசரிக்கிறார்கள். இந்த மண்டலபூஜை என்ற விஷயம் பரம்பரையாக ஐயனார் பக்தர்களாக ஐயனாருக்கு ஆட்பட்டிருக்கிற அடியவர்கள் அறிந்திருக்கிறார்களில்லை. ஆக, ஐயனின் புதிய அவதாரத்தினை முதன்மைப்படுத்தியே இது பேணப்படுகிறதா? இது பற்றியும் தெளிவான செய்திகள் பேணப்படுவது சிறப்பல்லவா? மாலை அணிபவர்களுக்கு ஒவ்வொரு குருசாமியும் ஒவ்வொரு விதமாக கட்டுப்பாடுகளை விதிப்பதும் ஒரு ஒழுங்கமைப்பில்லாத நிலையையே ஏற்படுத்தும். எனவே இவற்றில் ஓர் சீரிய ஒழுங்கமைப்பை ஏற்படுத்திக் கொள்வது வழிபாட்டைச் செம்மைப்படுத்தும். ஈ) இப்போதெல்லாம் புதிது புதிதாக சாஸ்தா ஆலயங்கள் உருவாகின்றன. அங்கே பூஜைகளில் சபரிமலை நடைமுறையைப் பின்பற்றுவதாகச் சொல்கிறார்கள். சபரிமலைக் கோயிலில் பின்பற்றப்பெறும் நடைமுறைகள் எவ்வாறானவை..? அவ்வழியில் பிரதிஷ்டை செய்யப்பெறும் ஆலயங்களுக்கு உள்ள கிரியாபத்ததிகள் வைதீக மரபிலா? ஆகம மரபிலா? அமையும் என்பதெல்லாம் சிந்திக்க வேண்டியனவே.. நம் தர்மம் நிலைபேறாகவும் சுதந்திரமாகவும் இருக்கிற நிலையில் இவற்றைத் தெளிவாக வெளிப்படுத்துவது எவ்வித சிக்கல்களையும் தராது என்பதும் இவற்றின் வழியே அடியவர்கள் தங்களைத் தயார் செய்து வழிபாட்டில் ஈடுபட வழிசெய்யும் என்பதும் எனது கருத்தாக உள்ளது. (உ) இதே போலவே ஏகாதசி, ஸ்கந்தஷஷ்டி போன்ற விரதங்களையெல்லாம் அனுசரிக்கக் கூடிய அடியவர்களை இனங்காண்பது கடினம். ஐயப்ப விரத பக்தர்கள் கழுத்தில் ஏராளமான மாலைகளை அணிந்திருப்பதை கொண்டே அவர்களை சுலபமாக இனங்காண முடிகின்றது. சிற்சில இடங்களில் இவ்வாறு தங்களை மாவிரதாதிகளாகக் காட்டிக்கொள்ளும் பாங்கும் நகைப்பிற்குரியதாகி விடுவதைக் காண்கிற போது மனம் வேதனைப்படுகின்றது. பிறர் அறியாமல் விரதம் மேற்கொள்ளும் வகையில் இவ்விரதத்தை அனுசரிக்கிறவர்களையும் ஆற்றுப்படுத்தின் சிறப்பல்லவா? இன்றைய உலகம் செல்லும் போக்கு அப்படியிருக்கிறது என் செய்வது? எனினும் உளவியல் ரீதியாக விரதாதிகள் தங்களை தனித்துவமாக தயார்ப்படுத்திக் கொள்வது கட்டாயம் அவசியமானது. அப்படிச் செய்கிற போது மனதில் புத்துணர்வும் விரதசங்கல்பமும் ஏற்படும் என்பது மறுக்க இயலாத உண்மை. (ஊ) இதே போலவே ஐயனார்- ஐயப்பன் என்னும் மூர்த்திகளிடையான உறவும் விளக்கப்பெற வேண்டும். இது தொடர்பாக அடியவர்கள் பலருக்கு அநேக சந்தேகங்கள் இருப்பதையும் காண்கிறோம். சாதாரணமாக அவதாரம் என்றால் அதாவது கிருஷ்ணாவதாரம், ஸ்ரீ ராமாவதாரம், போல பந்தள தேசத்தில் ராஜசேகரன் மகனாக எழுந்தருளியிருந்த ஐயப்பன் என்பதும் ஒரு அவதாரமாகவே கொள்ளலாமா? என்பதும் சிந்தனைக்குரியது. இவ்வாறு பந்தளத்தில் பகவான் பிறந்தது வரலாற்றுக் காலத்திற்கு உட்பட்டது என்றால் ஆண்டையும் ஆய்வு செய்து கணிப்பதும் வரலாற்றை உணர்வு பூர்வமாக மட்டுமன்றி ஆதாரபூர்வமாகவும் ஏற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும். இப்படியெல்லாம் ஒரு இந்து இளைஞனாக சிறியேன் கேட்கிற, ஆராய்கிற விடயங்களை பெரியவர்கள் -ஐயப்ப அடியார்கள் தவறாகக் கருதிவிடக்கூடாது. எவரையும் எவ்வகையிலும் புண்படுத்தும் நோக்கு சிறிதும் இதில் இல்லை. ஐயப்பபக்தியின் பேரில் மிகவும் நம்பிக்கையுடனும் சீர் செய்யப்பெற்ற வணக்க முறைமையாக இது விளங்க வேண்டும் என்ற அக்கறையுடனுமே இவற்றை வினவினேன். குற்றமுண்டாகில் பொறுத்தருள்க. எனினும் சபரிமலையிலுள்ள மகத்துவம் வாய்ந்த புனிதத்தன்மையையும் அங்கே திருவாபரணப்பெட்டி எடுத்து வரப்பெறும் போதும் மகரஜோதி ஏற்றும்போதும் உண்டாகிற அதியுச்ச பக்தி நிலையையும் ஏற்கத்தான் வேண்டும். ‘சுவாமி திந்தக்கத்தோம்….ஐயப்ப திந்தக்கத்தோம்…’என்று பாடி ஆடும் போதும் ஏற்படும் ஆனந்தம் உயர்வானதே.. அங்கே திருவாபரணப்பெட்டிகள் எடுத்து வரப்படும் போது கருடப்பட்சிகள் இரண்டு வட்டமிட்டு இறைசாந்நித்யத்தை வெளிப்படுத்துவதையும் மகரஜோதியின் எழில் மகத்துவமும் பேரின்பப் பெருநிலையான இறைவனின் பேராளுகை சபரிச்சந்நதியில் இருப்பதை எடுத்துக் காட்டும். எது எப்படியிருப்பினும் உண்மை அன்போடு உள்ளம் உருகி ஐயப்பப் பெருமான் திருவடிகளைப் போற்றுகிற அடியவர்கள் எல்லாப் பேற்றையும் பெறுவது உண்மை. ஆக, ஹரிஹசுதனாக எழுந்தருளி சைவவைஷ்ணவ சமரச மூர்த்தியாகக் காட்சி தரும் பெருமான் முன்றலில் நம்மிடையே பேதங்கள் இல்லை.. ஜாதிகள் இல்லை.. சமயபேதங்கள் இல்லை.. அளவற்ற கிரியைகள் இல்லை.. பக்தி என்பதில் சங்கமித்து சரணகோஷம் சொல்லுகிற போது நாம்…இன்பப் பெருவெளியில் சஞ்சரிப்பதை உணரலாம் என்பதில் மாற்றுக்கருத்துமில்லை…. தண்டாமரை முகமும் மலர்க்கண்களும் தன் கரத்தே செண்டாயுதமும் தரித்து எமையாளும் சிவக்கொழுந்தைக் கண்டேன் இரண்டு கரங்கூப்பினேன் வினைக் கட்டறுத்துக் கொண்டேன் அழியாப் பெருவாழ்வு தான்வந்து கூடியதே நாமும் சொல்லுவோம் - ஸ்வாமியே…. சரணம் ஐயப்பா!
ஐயப்ப வழிபாட்டில் உள்ள ஸம்ப்ரதாயங்களும்:
மகத்துவம் மிக்க மகரஜோதி
குற்றங்களை பொறுத்தருள வேண்டும்
கார்த்திகை மாதம்
இருமுடி உணர்த்தும் தத்துவம்
இருமுடி பொருட்களை காணிக்கையாக்கும் முறை
இருமுடி கட்டாமல்
குருசாமிகளின் கடமைகள்
ஐயப்பனின் வேறு பெயர்கள்
அய்யப்பன் அறுபடை வீடுகள்
ஐயப்ப வழிபாட்டில் உள்ள ஸம்ப்ரதாயங்களும்
ஐயனாரின் அவதாரமும் அருளாட்சியும்
சபரிமலைக்கு அருகாமையில் உள்ள இதர புகழ் பெற்ற கோவில்கள்
ஆகம நெறியில் ஐயப்பன் வணக்கம்
18 படிகளின் தத்துவம்
மாலை கழற்றிய பிறகும் பிரம்மச்சரியம் கட்டாயம்!
சபரிமலைக்கு முதலில் செல்லும் பக்தர்கள் செய்ய வேண்டிய பூஜை
ஐயப்பனின் முதல் தரிசனம் பெண்களுக்கு
ஸ்ரீ தர்மசாஸ்தா துணை